கீசி கார்டி அபார சதம்.. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்


கீசி கார்டி அபார சதம்.. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
x

image courtesy:ICC

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அடில் ரஷீத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கார்டிப்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜூவல் ஆண்ட்ரூ டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரண்டன் கிங் உடன் கீசி கார்டி கை கோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே பிரண்டன் கிங் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ஷாய் ஹோப்பும் சிறப்பாக விளையாட வெஸ்ட் இண்டீஸ் வலுவான ரன் குவிப்பை நோக்கி முன்னேறியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கீசி கார்டி சதம் விளாசி அசத்தினார். ஆனால் சதமடித்த சிறிது நேரத்திலேயே கீசி கார்டி (103 ரன்கள்) விக்கெட்டை பறிகொடுத்தார். அரைசதம் கடந்த ஷாய் ஹோப் 78 ரன்களில் அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 350 ரன்களை கடக்கும் என்பதுபோல் தெரிந்தது. ஆனால் அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பினார். இறுதி கட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக பந்துவீசியது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவர்களில் 308 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்கள் அடித்துள்ளது.

1 More update

Next Story