பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஆஸ்திரேலிய அணியை மீண்டும் விமர்சித்த கவாஜா

இந்த சர்ச்சைக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று கூறினார்.
கவாஜா
Published on: 

மெல்போர்ன், ,

கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவை முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மீண்டும் விமர்சித்துள்ளார்.

சர்ச்சை

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது கேமராவில் பதிவானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பந்தின் தன்மையை மாற்ற வெளிப்பொருள் பயன்படுத்தப்பட்டது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்று பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கையை கவாஜா விமர்சித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை கம்மின்ஸ், "முற்றிலும் முட்டாள்தனமானவை" என்று கூறியிருந்தார்.

மீண்டும் விமர்சித்த கவாஜா

இந்நிலையில், 'தி கிரேடு கிரிக்கெட்டர்' பாட்காஸ்டில் பேசிய கவாஜா, இந்த குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

"நான் நிம்மதியாகத தூங்குவேன். நான் உண்மையைத்தான் கூறியுள்ளேன். கேமரூன் பான்கிராப்டும் உண்மையைத் தெரிவித்துள்ளார். சாட் சேயர்ஸும் உண்மையைப் பேசியுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டார்.

பந்தைச் சேதப்படுத்தும் நடவடிக்கை குறித்து யாருக்கு தெரியும் என்ற விவாதத்தைவிட, அதற்கான பொறுப்பை ஒட்டுமொத்த அணியும் ஏற்றுக்கொள்வதே முக்கியம் என்று கவாஜா வலியுறுத்தினார்.

பந்துவீச்சாளர்கள் தனியாக அறிக்கை வெளியிட்டது அணியின் மற்ற வீரர்களை இந்தப் பொறுப்பேற்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், 'எப்படியாவது வெற்றி பெற வேண்டும்' என்ற மனப்பான்மை 2016-ம் ஆண்டு முதலே படிப்படியாக வளர்ந்ததாகவும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமிருந்து பயிற்சியாளர்கள் வழியாக வீரர்களுக்கு அழுத்தம் சென்றதாகவும் அவர் கூறினார்.

X