

வெல்லிங்டன்,
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
SENA நாடுகள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் தொடக்க வீரராக அரைசதம் அடித்த ஆறாவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் கே.எல். ராகுல் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு சனத் ஜெயசூர்யா, சயீத் அன்வர் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் வீரர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். தற்போது இந்த சிறப்புப் பட்டியலில் ராகுலும் இணைந்துள்ளார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 216 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 368 ரன்களுக்கு பதிலளித்து விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 52 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.