

தரம்சாலா,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நேற்று நடந்த குவாலிபையர்-1 போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ககிசோ ரபாடா, முகமது சிராஜ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் பந்துகளை நாலாபுறமும் விளாசிய கோலி, வெறும் 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார்.
அவரது அதிரடியான இன்னிங்ஸ் காரணமாக பெங்களூரு அணி பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறியது. பின்னர் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் எடுத்த ரன்களின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து நான்கு சீசன்களில் (2023, 2024, 2025, 2026) 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
அவரது அபார ஆட்டத்தின் உதவியுடன் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.