

புதுடெல்லி
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் பதும் நிசாங்கா மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அன்குல் ராய், கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 143 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரகானே 13 ரன்களில் வெளியேறினார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான, பின் ஆலன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் சதம் விளாசினார்.
ரகுவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேமரூன் கிரீன் (33) ஆட்டமிழக்கவில்லை. 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா 147 ரன்களை எடுத்தது. இதனால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.