சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை படைத்த குசல் பெரேரா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் குசல் பெரேரா சதம் அடித்து அசத்தினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

நெல்சன்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை குசல் பெரேராவின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அசலன்கா 3 விக்கெட்டுகளும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இது இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வென்று இருந்த நியூசிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குசல் பெரேரா ஆட்ட நாயகனாகவும், நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டபி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக குசல் பெரேரா இந்த ஆட்டத்தில் 44 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் தில்ஷன் 55 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள குசல் பெரேரா புதிய சாதனை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com