

புது டெல்லி,
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து சாம்சனை நீக்கியது தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் எடுத்த மிகக் கடினமான முடிவு என்று கம்பீர் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு பின் சஞ்சு சாம்சன் குறித்து கவுதம் கம்பீர் பேசினார். அவர் கூறுகையில், “சஞ்சுவின் திறமையே அவர் அணியில் இடம்பெறுவதற்கு போதுமானது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு திறமை இல்லாமல் ஒருவரால் உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வெல்ல முடியாது. எனவே, அவர் ஏற்கனவே தன்னை நிரூபித்துவிட்டார்.
இங்கிலாந்து தொடரின்போது அவரை அணியில் இருந்து நீக்கியது, எனது பயிற்சிக் காலத்தில் நான் எடுத்த மிகக் கடினமான முடிவாகும். ஆனால் சில நேரங்களில் வீரர்களின் தற்போதைய பார்மையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 3 அல்லது 4 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தவறினால், அவர்கள் மோசமான வீரர்களாகி விடமாட்டார்கள்’ என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியபோது, தொடர் நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், அயர்லாந்து தொடரில் 0, 5 ரன்களிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து தொடரின் 2-வது போட்டியில் அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் அணியில் இடம்பெற்ற சாம்சன், 3 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 117 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.