லெஜெண்ட்ஸ் லீக்: டி வில்லியர்ஸ் அதிரடி சதம்... பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்


லெஜெண்ட்ஸ் லீக்: டி வில்லியர்ஸ் அதிரடி சதம்... பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்
x

image courtesy:twitter/@WclLeague

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஏபி டி வில்லியர்ஸ் கைப்பற்றினார்.

பர்மிங்காம்,

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இருப்பினும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடாமலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்னயிக்கும் இறுதிப்போட்டி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷர்ஜீல் கான் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தது. கம்ரான் அக்மன் 2 ரன்களிலும், கேப்டன் ஹபீஸ் 17 ரன்களிலும், சோயப் மாலிக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்ஜீல் கான் 76 ரன்களில் அவுட்டானார்.

இறுதி கட்டத்தில் உமர் அமின் (36 ரன்கள்) மற்றும் ஆசிப் அலி (28 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வில்ஜோன் மற்றும் பார்னெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினர். இதில் அம்லா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஏபி டி வில்லியர்ஸ் உடன் டுமினி கை கோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஏபி டி வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் டுமினி அரைசதம் அடித்தார்.

வெறும் 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த தென் ஆப்பிரிக்கா 197 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. டி வில்லியர்ஸ் 120 ரன்களுடனும், டுமினி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story