லெஜெண்ட்ஸ் லீக்: அதிரடியில் பட்டையை கிளப்பிய டி வில்லியர்ஸ் .. இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

இந்த ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் வெறும் 41 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லெய்செஸ்டர்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் லெய்செஸ்டரில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் - இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பில் முஸ்தாத் 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பார்னெல் மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஏபி டி வில்லியர்ஸ் - ஹாஷிம் அம்லா களமிறங்கினர். இதில் அம்லா நிதானமாக விளையாட மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடியில் பட்டையை கிளப்பினார். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

வெறும் 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 116 ரன்களுடனும், அம்லா 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com