லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி: இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், லார்ட்ஸ் தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது,

5 நாட்களும் போராடிய விதம் மிகவும் பெருமை அளிக்கிறது. இன்று காலை (நேற்று) மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். இலக்கு பெரிய ஸ்கோர் கிடையாது. அதனால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் ஆட்டத்திற்குள் வந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். டாப் வரிசையில் ஒன்றிரண்டு 50 ரன் பார்ட்னர்ஷிப் அவசியமாக இருந்தது. அதை செய்ய தவறி விட்டோம்.

ஜடேஜா அனுபவம் வாய்ந்த வீரர். எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தகவல் எதுவும் அனுப்பவில்லை. உண்மையிலேயே அவர் நன்றாக ஆடினார். முதல் இன்னிங்சில் 80-100 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதில் ரிஷப் பண்டின் ரன்-அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த டெஸ்டில் பும்ரா ஆடுவாரா என்பது விரைவில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com