

கவுகாத்தி,
ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக மாறிவிட்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 118 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து, எளிய இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேரண்டர்பர்ப் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார். குறிப்பாக முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விட்டுகொடுத்ததோடு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தை முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா பக்கம் திரும்பச்செய்தார். இதைதான் புவனேஷ்குமார் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புவனேஷ்குமார் கூறுகையில், பேரண்டர்ப் மிகச்சிறப்பாக பந்து வீசினார். மிகவும் சரியான திசையில் துல்லியமாக பந்து வீசினார். 20 ஓவர் போட்டிகளில் 4 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உறுதுணையாக இருக்க வேண்டும். ரோகித் மற்றும் விராட் ஆகியோரின் விக்கெட்டுகள் முதல் ஓவரிலேயே பறிபோனது ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதாய் அமைந்தது. மழை பெய்து இருந்ததால், பேட் செய்வது கடினமாக இருந்தது. துவக்க விக்கெட்டுகள் போன போதும், நாங்கள் மீண்டும் ரன் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அந்த முயற்சி ஈடேறவில்லை. அவர் செய்துதான் தவறு என்று யார் ஒருவரையும் சுட்டிக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. எனவே, இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்துவிட்டது என மட்டும் சொல்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.