சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்

மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
Published on

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது. இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டு முறை சாம்பியனான கோவை கிங்ஸ் வெளியேறி விட்டது. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து மதுரை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதாக போட்டி தொடங்கப்பட்டது. தாமதம் காரணமாக ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 41 ரன்களும், முருகன் அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 31 ரன்களில் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

சேப்பாக் அணியை பொறுத்தவரை விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும், ரோகித் மற்றும் அபிஷேக் தன்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com