

நியூ சண்டிகர்,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியில் அறிமுக வீரராக களம் கண்ட 23 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் இதுவரை 15.5 ஓவர்கள் பந்து வீசி 7 மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக் கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார். இதில் தனது முதல் ஓவரிலேயே அப்துல் மாலிக்கின் விக்கெட்டை எடுத்ததும் அடங்கும். இந்திய பவுலர் ஒருவர் தனது டெஸ்ட் பயணத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்துவது இது 8-வது நிகழ்வாகும். கடைசியாக டினு யோகனன் 2001-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டின் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்திருந்தார்.
அறிமுக டெஸ்டிலேயே அசத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த 23 வயதான மானவ் சுதர் கூறியதாவது:-
”கிரிக்கெட் எப்போதும் எனது குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. கிரிக்கெட் என்றால் எனது தந்தைக்கு கொள்ளை பிரியம். எங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் டி.வியில் பார்ப்போம். நானும் அவர்களுடன் அமர்ந்து பார்ப்பேன். அங்கிருந்து தான் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் தொடங்கியது. அதன் பிறகு தெருவில் நண்பர்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அந்த தெருவோர கிரிக்கெட், விளையாட்டின் அடிப்படை விஷயங்களான பேட்டை எப்படி பிடித்து ஆடுவது, எப்படி பந்து வீசுவது ஆகியவற்றை கற்றுக் கொடுத்தன.
எனது 10-11 வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறையாக பயிற்சியை தொடங்கினேன். அங்கு பயிற்சியாளர்கள் தீரஜ், வினோத் ஆகியோர் சரியான தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து எனது ஆட்டத்திறன் மேம்பட உதவினர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியது தான் மிகப்பெரிய திருப்பு முனை. அந்த அனுபவம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. அங்கிருந்து தான் ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணம் உண்மையாக ஆரம்பித்தது.
இந்த பயணத்தில் நான் பல சவால்களை எதிர்கொண்டேன். நிறைய பேர் என்னிடம் படிப்பில் கவனம் செலுத்து. கிரிக்கெட்டில் எதிர்காலம் இல்லை. தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காதே என்று கூறினார்கள். ஆனால் நான் எதையும் கேட்கவில்லை. நம்பிக்கையையும் இழக்கவில்லை. ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டேன். இந்திய 'ஏ' அணியிலும் இடம் பெற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதனால் எந்த நேரத்திலும் இந்திய அணியில் அழைப்பு வரலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேர்வான தகவலை எனது சகோதரி சொன்னதும் பரவசத்துடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. எனது வாழ்க்கையில் அது தான் மிகச்சிறந்த உணர்வு. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பது கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நனவாகி விட்டது. முதல்தர கிரிக்கெட் மற்றும் இந்திய 'ஏ' போட்டிக்காக பல ஆண்டுகள் தொடர்ந்து கடினமாக உழைத்தற்குரிய பரிசு தான் இது.”
இவ்வாறு அவர் கூறினார்.