ஐசிசி அக்டோபர் மாத விருதுகள் - முதல் முறையாக யான்சன்... 2-வது முறையாக தீப்தி சர்மா வென்று அசத்தல்

இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான விருதை தீப்தி கைப்பற்றியிருந்தார்.
மார்கோ யான்சன், தீப்தி சர்மா
Published on: 

புதுடெல்லி,

அக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன், இந்தியாவின் தீப்தி சர்மா ஆகியோர் வென்றுள்ளனர்.

முதல் முறையாக

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டரான மார்கோ யான்சன், அக்டோபர் மாதத்தில் சர்வதேசப் போட்டிகளில் 198 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டத்தில் யான்சன் சிறப்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் 85 ரன்கள் எடுத்த அவர், பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் யான்சன் முதலிடத்தைப் பிடித்தார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் முதலிடம் பிடிப்பது, 2024-ம் ஆண்டு ககிசோ ரபாடாவுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அதேபோல், டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு முதலிடம் பிடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் யான்சன் பெற்றார்.

இதன்ன் மூலம் பாகிஸ்தானின் அராபத் மின்ஹாஸ், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, யான்சன் தனது முதல் ஐசிசி மாத விருதை வென்றுள்ளார்.

2-வது முறையாக

இந்திய மகளிர் அணியின் ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் பேட்டிங் செய்யக் கிடைத்த ஒரே வாய்ப்பில் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்த தீப்தி, பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், ஓவருக்கு சராசரியாக 3.42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஒரே ஒரு முறை பேட்டிங் செய்த தீப்தி, 37 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். தனது சுழற்பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மா வென்றுள்ளார். இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான விருதை அவர் கைப்பற்றியிருந்தார்.

இந்த விருதுக்கான போட்டியில் வங்கதேசத்தின் ஷோபனா மோஸ்தரி, ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தீப்தி இந்த விருதை வென்றுள்ளார்.

X