

ஜெய்ப்பூர்,
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 64வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ஷ் மறும் இங்லிஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். பவர்பிளே முடிவில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய இங்லிஸ் 23 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.
8 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 100-ஐ கடந்தது. அப்போது அதிரடியாக ஆடிய இங்லிஸ் 60(29) ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் மார்ஷுடன் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்ஸ் 25 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து பூரன் 16(11) ரன்களில் அவுட்டாக பண்ட் களமிறங்கினார். இருவரும் அதிரடியாக ஆட ஸ்கோர் 200-ஐ கடந்தது. அப்போது பண்ட் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் மார்ஷ் 96(57) ரன்களில் ரன் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 96(57) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் யஷ் ராஜ் புஞ்ஜா 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்டிங் ஆட உள்ளது.
புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகும். அதேவேளை, லக்னோ பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.