ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) அடித்த 8-வது சதம் இதுவாகும்
ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்
Published on

கலிபோர்னியா,

6 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வாஷிங்டன் பிரீடம் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்சை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. 6-வது வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடிய கேப்டன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் (49 பந்து, 2 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் வாஷிங்டன் அணி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) அடித்த 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் 4-வது இடத்தில் உள்ள ரோகித் சர்மா (இந்தியா), மைக்கேல் கிலின்ஜெர், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் (மூவரும் ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். இந்த வகையில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 11 சதங்களுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ரீலி ரோசோவ், இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் தலா 9 சதங்களுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com