

கொச்சி,
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தனது ‘6-7’ கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் பிரபலமான இளம் சுழற்பந்துவீச்சாளர் மேதாவி பிதூரி, மகளிர் பிரீமியர் லீக் 2027 வீராங்கனைகள் ஏலப் பட்டியலில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் வெளியிடப்பட்ட ஏலப் பட்டியலில் 146 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். தற்போது கடைசி நேரத்தில் மேதாவி பிதூரி உட்பட 4 வீராங்கனைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஏலத்திற்கான வீராங்கனைகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் மேதாவி பிதூரி, சமைரா ராகவ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் அவான்யா ஜெயின், நியூசிலாந்தின் இடதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் பிரீ இலிங் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி குயின்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேதாவி பிதூரி, தனது விக்கெட் கொண்டாட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
எதிரணி வீராங்கனையை ஆட்டமிழக்க செய்த பிறகு அவர் வெளிப்படுத்திய ‘6-7’ சைகை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
2025-ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய மேதாவி பிதூரி, இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
2026-ஆம் ஆண்டு தொடரில் மத்திய டெல்லி குயின்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. ஐந்து அணிகளிலும் சேர்த்து 27 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக 150 வீராங்கனைகள் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி பிரீமியர் லீக்கில் தனது ஆட்டத்தாலும் தனித்துவமான கொண்டாட்டத்தாலும் கவனம் ஈர்த்துள்ள மேதாவிக்கு, மகளிர் பிரீமியர் லீக்கில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.