வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான வெற்றி; பந்துவீச்சாளர்களை பாராட்டிய மிட்செல் மார்ஷ்

Image Courtesy: @cricketcomau
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
கிங்ஸ்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கடந்த 20ம் தேதி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 189 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 60 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 7 விக்கெட்டை இழ்ந்து 190 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமருன் கிரீன் (51 ரன்), மிட்செல் ஓவன் (50 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி220 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு பங்காற்றிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கேப்டன் மிட்செல் மார்ஷ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உண்மையில் மிகவும் சிறப்பாக இந்த டி20 தொடரை தொடங்கியுள்ளோம். வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், கடைசி 5 ஓவர்களை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக செயல்பட்டு தங்களது திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தினர்.
அதிக டி20 கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை அவர்கள் வெளிக்காட்டினர். இதுபோன்ற பந்துவீச்சு எப்போதும் உற்சாகத்தை தருவதாக இருக்கும். நாங்கள் தொடர்ச்சியாக இதேபோன்று செயல்படுவோம் என நம்புகிறேன். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






