

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய போது பந்தை உப்புத்தாளால் தேய்த்து சேதப் படுத்திய சர்ச்சையில், 8 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா புதிய தகவல்களை வெளியிட்டு கிரிக்கெட் அரங்கை மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார். 'கேப்டவுன் டெஸ்டில் பந்தின் தன் மையை மாற்ற முயற்சித்தது ஆஸ்திரேலிய அணியில் உள்ள அனைவருக் கும் தெரியும். ஆனால் வார்னர். அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோர் மட்டும் தண்டிக்கப்பட்டது தவறானது. இதற்கு ஒட்டு மொத்த அணியும் பொறுப்பு' என கவாஜா தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கவாஜா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இனி இதற்கு காரணமானவர்கள் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்) உரிய பதில் அளிக்க வேண்டும் என வார்னரும் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில் பந்தை சேதப்படுத்தும் சதி திட்டத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என கவாஜாவின் குற்றச்சாட்டை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மறுத்துள்ளார்.
2021-ம் ஆண்டில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், களத்தில் பந்தை சேதப்படுத்துவது குறித்து தங்களுக்கு முன்னரே தெரியாது என கூறியிருந்தனர். அந்த நிலைப்பாட்டில் ஸ்டார்க் உறுதியாக இருக்கிறார்.இது குறித்து 34 வயதான ஸ்டார்க் கூறுகையில், '8 ஆண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பு தான். அந்த சமயத்திலும், அதற்கு பின்பும் நாங்கள் கடுமையான கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டோம். மற்ற பந்து வீச்சாளர்கள் சார்பாக நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் எனது கருத்தோ அல்லது நினைவுகளோ மாறவில்லை. 2021-ல் நாங்கள் என்ன சொன்னோமோ அதில் இப்போதும் உறுதியாக இருக் கிறேன். இது ஒரு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்றால், அது பற்றி சம்பந்தப்பட்டவர்களே விளக்க வேண்டும். 2021-ல் நாங்கள் அளித்த அறிக்கையின் படி, களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. உண் மையை சொல்வது என்றால், தற்போது எழுந்திருக்கும் விவாதங்களை நான் பெரிய அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை' என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்துவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை என்றும், மீண்டும் பழைய விஷயத்தை கிளறுவதில் எந்த பலனும் இல்லை என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார்.