

மும்பை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை முகமது ஷமி வெளியிட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (வயது 36). டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
கடைசியாக 2023-ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தி ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் விளையாடினார்.
2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், அந்த அறிமுக போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 6 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெர்த்தில் நடந்த போட்டியில் 56 ரன்களை விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது அவருடைய சிறந்த பந்துவீச்சாக உள்ளது.
2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்த 56 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை), இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக அமைந்தது. இதனால், தன்னால் பேட்டிங்கிலும் திறமையாக விளையாட முடியும் என காட்டினார்.
200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வரிசையில் 5-வது வீரராக ஷமி இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், அவருடைய ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து, வளருவதற்கான வாய்ப்பை தந்து, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்ததற்காக, பி.சி.சி.ஐ. மற்றும் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்புக்கு அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.