

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காகத் தன்னைப் புதிதாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஷமி ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தனது திறமையை நிரூபித்துவிட்டார் , அவரைத் தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கும்போது தற்போதைய பார்மின் அடிப்படையில் தேர்வாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.
முகமது ஷமி கடைசியாக 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் ஒருவராக இருந்தபோதிலும், அதன் பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கிடையில், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சு சராசரி 16.72 ஆக இருந்ததுடன், மூன்று முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்
ஷமியின் உடற்தகுதி மற்றும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் திறன் குறித்து சில கேள்விகள் எழுந்த நிலையில், அவர் தகுதியுடன் இருப்பதாகவும் விளையாடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்திய ரஞ்சி டிராபி சீசனிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்கால் அணிக்கு உதவினார். இதன் மூலம், இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அவர் தொடர்ந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில், மற்றொரு அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்தும் பாரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மொத்தம் 45 விக்கெட்டுகளை புவனேஷ்வர் வீழ்த்தியுள்ளார். இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது என்று அருண் கூறியுள்ளார். தொடர்ந்து விளையாடும் உடற்தகுதியையும் தற்போதைய செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும் என்றும், முதலில் நியூசிலாந்து தொடரில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.