

மும்பை,
ஐ.பி.எல். 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தமிழக சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த் ஆகியோர் லக்னோ அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளனர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் ராஜஸ்தான் அணியிலிருந்து லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய முகமது ஷமி, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளார். கடந்த ஆண்டு லக்னோ அணி அவரை ரூ.10 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது ரூ.8 கோடி ஒப்பந்தத் தொகையில் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை 132 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனுபவம் வாய்ந்த அவரது வருகை ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த்தும் லக்னோ அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார். ரூ.75 லட்சம் ஒப்பந்தத் தொகையிலேயே அவர் ராஜஸ்தான் அணிக்குச் செல்கிறார்.
இதுவரை 9 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள சித்தார்த், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சில் துல்லியமாகப் பந்துவீசும் திறன் கொண்ட அவர், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சுப் பிரிவில் இடம்பெற உள்ளார்
இதற்கிடையே, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே பெற்றுவந்த ரூ.2.4 கோடி ஒப்பந்தத் தொகையிலேயே லக்னோ அணியில் தொடர உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை 64 போட்டிகளில் விளையாடியுள்ள சாம் கரண், 997 ரன்கள் எடுத்ததுடன் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அவரது வருகை லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.