

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அவசரப்படாமல், நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அறிவுறுத்தியுள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இதனால் வீரர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், 'அவசரம்' என்ற மனநிலையுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மோர்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அவசரம் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம். அந்த வார்த்தையே எனக்குப் பிடிக்காது. ஏனெனில், வீரர்கள் அதிகமாக முயற்சி செய்து தங்களது சரியான லைன் மற்றும் லெந்தைத் தவறவிடக்கூடும். எனவே, வெளியில் இருந்து வரும் அழுத்தங்களையும் விமர்சனங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒவ்வொரு செஷனாகப் பிரித்து சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதற்காக வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஆனால், தற்போதைய சூழலில் அது சவாலான ஒன்று என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தின் ஆடுகளம் பசுமையாகக் காணப்படுவதாகவும், இருப்பினும் ஆடுகளத்தின் தோற்றத்தை மட்டும் வைத்து அதன் தன்மையைத் தீர்மானிக்க முடியாது என்றும் மோர்கல் குறிப்பிட்டார். கடந்த வெலிங்டன் டெஸ்டிலும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, போட்டியின் முதல் செஷனில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.இந்தியாவின் வேகப்பந்துவீச்சு குறித்து பேசிய மோர்கல், புதிய குகபுரா பந்தைப் பயன்படுத்தி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம் .பந்து மென்மையான பிறகு விக்கெட் எடுப்பது கடினமாகிவிடும்.அதனால் ஆரம்ப ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசுவதுடன், சில ரன்களைக் கொடுத்தாலும் துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.