

மும்பை,
இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) வெற்றி பெற்று 13 வருடங்களாக நீடித்து வந்த தொடக்கப் போட்டி சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
மும்பை அணி கடைசியாக ஒரு ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது 2012-ஆம் ஆண்டுதான். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதன்பின் 2013 முதல் 2025 வரை நடந்த கடந்த 13 சீசன்களிலும் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியையே தழுவியது.
இதனால், இந்த சாபம் இந்த சீசனிலாவது தீருமா என்ற எதிர்பார்ப்பு மும்பை ரசிகர்களிடையே நிலவியது. அதன்படி, இன்று மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 221 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் கடந்த 13 வருடங்களாக நீடித்து வந்த "தொடக்கப் போட்டி சாபம்" முடிவுக்கு வந்தது.