

மான்செஸ்டர்,
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் வங்களாதேசம் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்களாதேசம் அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்களாதேசம் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வீசிய 2-வது ஓவரில் திலாரா அக்தர் மற்றும் ஷர்மின் அக்தர் டக்-அவுட்டாக வெளியேறினர். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வங்களாதேசம் அணி நெருக்கடியில் சிக்கியது.
அதன்பின் கேப்டன் நிகர் சுல்தானா 36 ரன்களும், ஷோபனா மோஸ்தரி 22 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஷோர்னா அக்தர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வங்களாதேசம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது.
124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி (25), குல் பெரோசா (23) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின் வங்களாதேசம் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். நஹிதா அக்தர் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சஞ்சிதா அக்தர் மேக்லா 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை சிதறடித்தார்.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்களாதேசம் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.