

பெங்களூரு,
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டியில், இந்திய இளம் ஆல்-ரவுண்டர் நமன் தீர் அதிரடியாக விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நமன் தீர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவர் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 400. இதன் மூலம் குறைந்தது 5 பந்துகளை எதிர்கொண்டு அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் இன்னிங்ஸை நிறைவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையைப் அவர் பெற்றுள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் குறைந்தது 5 பந்துகளை எதிர்கொண்டு இன்னிங்ஸை நிறைவு செய்த இந்திய வீரர்களில், இதற்கு முன்பு யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 362.50 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்தனர்.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதேபோல், 2018-ம் ஆண்டு நிதாஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் குவித்தார்.
தற்போது 6 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நமன் தீர், 400 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருவரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் நமன் தீர் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் 16 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 சர்வதேசப் போட்டியில் ஓர் இன்னிங்ஸின் முதல் 3 பந்துகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்தார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கும் முதல் 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார்.
மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில், இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடப்பட்டது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.