கைகொடுத்த நவீன்.. நட்பாக மாறிய பகை..!! ரசிகர்களின் இதயங்களை வென்ற விராட் கோலி..!!

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்தியாவின் விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்தது பெரிய சர்ச்சையாக மாறியது.
image courtesy; RCB instagram via ANI
image courtesy; RCB instagram via ANI
Published on

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.

இதில் தலைநகர் டெல்லியில் நேற்று அரங்கேறிய 9-வது லீக்கில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களின் 2வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாகிதி 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் 131 (84) ரன்களுடன் நிறைய சாதனைகளை படைத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் இஷான் கிஷன் 47, விராட் கோலி 55, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்தியாவின் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்ததும் அதற்கிடையே கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியது. அதிலிருந்தே நவீன் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்திய ரசிகர்கள் "கோலி, கோலி" என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த நிலையில் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நவீனுக்கு எதிராக கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி கையசைத்து வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டார். அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று விராட் கோலியிடம் கை கொடுத்தார். அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட விராட் கோலியும் அவருடைய தோளில் தட்டிக் கொடுத்த தருணம் மொத்த பகையையும் நட்பாக மாற்றும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் பேசியது பின்வருமாறு. "விராட் கோலி நல்ல வீரர். நாங்கள் கை கொடுத்துக் கொண்டோம். இது வரை களத்தில் நடந்தது அனைத்தும் களத்திற்குள் மட்டுமே இருக்கும். வெளிய எதுவுமில்லை. களத்தில் நடந்ததை அனைவரும் பெரிதாக்கி விட்டனர். தற்போது கை கொடுத்த நாங்கள் அனைத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். விராட் கோலி நல்ல குணம் கொண்டவர்" என கூறினார்.

View this post on Instagram

ஐபிஎல் தொடரில் உருவான மோதல் உலகக்கோப்பையில் நட்பாக முடிந்துள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com