

காட்மாண்டு,
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 4-ம் தேதி நேபாளத்தில் தொடங்குகின்றன.
14 அணிகள் பங்கேற்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி நவம்பர் 21-ம் தேதி நிறைவடைகிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 4-ம் தேதி நேபாளத்தில் தொடங்குகின்றன. டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தகட்ட தகுதிச்சுற்றுக்குச் செல்லும்.
இந்தத் தொடரின் முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
- நேபாளம் - இத்தாலி: திரிபுவன் பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானம், கீர்த்திபூர்.
- நமீபியா - உகாண்டா: அப்பர் முல்பானி கிரிக்கெட் மைதானம்.
இந்த அணிகளுடன் கனடா, குவைத், ஜெர்சி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்தப் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2027 உலகக்கோப்பைக்கான குளோபல் குவாலிபையர் சுற்றுக்குத் தகுதி பெறும்.
குளோபல் குவாலிபையர் சுற்றுக்கு ஏற்கெனவே 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன. தரவரிசை அடிப்படையில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், லீக் 2 தொடரில் முதல் 4 இடங்களைப் பிடித்த அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும் அந்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த 6 அணிகளுடன் தற்போது நடைபெறவுள்ள பிளேஆப் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் சேரும். இதன் மூலம் குளோபல் குவாலிபையரில் மொத்தம் 10 அணிகள் மோதும்.
குளோபல் குவாலிபையர் சுற்றில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி, 2027 ஒருநாள் உலகக்கோப்பையின் முக்கியச் சுற்றான குரூப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.
2, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பையின் தொடக்கச் சுற்றான 'சூப்பர் சீரிஸ்' சுற்றில் விளையாடும். இதில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி குரூப் சுற்றுக்கு முன்னேறும்.