வம்பிழுத்த திக்வேஷ் ரதி... சிக்சர் விளாசி அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த நிதிஷ் ராணா..

டெல்லி பிரீமியர் லீக் தொடரில் இந்த சம்பவம் நடைபெற்றது.
புதுடெல்லி,
டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் - தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு டெல்லி லயன்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60 ரன்கள் அடித்தார்.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு டெல்லி அணி கேப்டன் நிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் எளிதில் வெற்றி பெற்றது. 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மேற்கு டெல்லி லயன்ஸ் அணி 202 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றதுடன் குவாலிபயர் 2-க்கும் தகுதி பெற்றது. நிதிஷ் ராணா 55 பந்துகளில் 134 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் இருந்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி கொண்டிருந்தபோது 8-வது ஓவரை திக்வேஷ் ரதி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ராணா ரன் எதுவும் அடிக்கவில்லை.
அடுத்த பந்தை வீச சென்ற திக்வேஷ் ரதி கடைசி நேரத்தில் வீசவில்லை. அடுத்த பந்தை திக்வேஷ் வீசியபோது அதை எதிர்கொள்வதிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய ராணா தக்க பதிலடி கொடுத்தார். அதனால் கடுப்பான திக்வேஷ் சில வார்த்தைகள் சொன்னதற்கு ராணா பதிலடி கொடுத்தார்.
அதே வேகத்தில் பந்தை எதிர்கொண்ட ராணா ரிவர்ஸ் ஸ்வீப் வாயிலாக சிக்சர் அடித்து தன்னுடைய பேட்டில் நோட்புக்கில் எழுதுவது போல எழுதி முத்தம் கொடுத்தார். கடந்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்காக திக்வேஷ் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் புத்தகத்தில் எழுதுவது போல கொண்டாடினார். அதனால் ஒரு போட்டியில் விளையாடத் தடையும் பெற்றார்.
அந்த சூழலில் ராணா இப்போட்டியில் திக்வேஷ் ரதி ஸ்டைலிலேயே அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். அதன் காரணமாக கோபமடைந்த திக்வேஷ் அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராணாவும் வாக்குவாதம் செய்ய களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இறுதியில் நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






