

லண்டன்,
ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படதேவையில்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை. மேலும், இன்றைய போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டி என்று இணையத்தில் தகவல் பரவின. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தநிலையில், அதனை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து பேசினார். அதன்படி, ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து எந்தவிதமான கவலையோ, அச்சமோ பட தேவை இல்லை என்றும், அவர் விரைவில் பார்முக்கு திரும்புவார் என்றும் கூறினார்.
மேலும் பேசிய மோர்கல், "இந்தத் தொடர் முழுவதும் புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. ரோகித் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சவால்களில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த முறையும் அவர் நிச்சயம் மீண்டு வருவார்," என்று தெரிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 11,700-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள ரோகித், இந்தியாவின் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவராக திகழ்கிறார். எனவே, தொடரை கைப்பற்றும் இன்றைய முக்கியமான போட்டியில் அவர் தனது பழைய பார்மை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.