

மும்பை,
இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே தேர்வு செய்துள்ள இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் அவர் தேர்வு செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த டெஸ்ட் அணியைத் தேர்வு செய்யுமாறு ரஹானேவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, அவர் தனது விருப்பமான 11 வீரர்களைத் தேர்வு செய்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோரை ரஹானே தேர்வு செய்துள்ளார். 3-வது இடத்தில் ராகுல் டிராவிட்டையும், 4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார்.
5-வது இடத்தில் தனக்கே இடம் அளித்துள்ள ரஹானே, 6-வது இடத்தில் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனியை தேர்வு செய்துள்ளார்.
இந்த அணியின் கேப்டனாக தோனியைத் தேர்வு செய்ததற்குப் பின்னால் தனிப்பட்ட காரணமும் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ரஹானேவுக்கு முதல் கேப்டனாக இருந்தவர் தோனி. இதனால், தனது சிறந்த அணிக்குத் தோனியையே கேப்டனாக நியமித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ரஹானே தேர்வு செய்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் தற்போதைய முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல், இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலம் முக்கியப் பங்கு வகித்த விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் இடம்பெறவில்லை. இந்த தேர்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. முரளி விஜய்
2. ஷிகர் தவன்
3. ராகுல் டிராவிட்
4. சச்சின் டெண்டுல்கர்
5. அஜிங்கியா ரஹானே
6. எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
7. ரவீந்திர ஜடேஜா
8. ரவிச்சந்திரன் அஸ்வின்
9. புவனேஷ்வர் குமார்
10. முகமது ஷமி
11. இஷாந்த் சர்மா