ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசை: ஜோப்ரா ஆர்ச்சர் கிடுகிடு முன்னேற்றம்

image courtesy:PTI
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 4 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
துபாய்,
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதன் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-15 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 4-வது இடத்திலும் தொடருகிறார்கள். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் தொடருகிறார்.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் 5 இடங்கள் உயர்ந்து 19-வது இடத்தையும், ஜேக்கப் பெத்தேல் 56 இடங்கள் முன்னேறி 65-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோஸ் பட்லர் 7 இடங்கள் அதிகரித்து 35-வது இடம் வகிக்கிறார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதலிடத்திலும், இலங்கையின் தீக்ஷனா 2-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கிடுகிடுவென 16 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 9 ஓவர்களில் 3 மெய்டனுடன் 18 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இங்கிலாந்து பவுலர் அடில் ரஷித் 15-ல் இருந்து 8-வது இடத்துக்கு வந்துள்ளார்.
இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கும், ரவீந்திர ஜடேஜா 2 இடம் சரிந்து 10-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களில் மாற்றமில்லை. சிக்கந்தர் ராசா முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.






