ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜிம்பாப்வே வீரர் முதலிடம்


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜிம்பாப்வே வீரர் முதலிடம்
x

image courtesy:PTI

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 4-வது இடத்திலும், டேரில் மிட்செல் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீர்ரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராசா 9 இடங்கள் எகிறி 22-வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக மகரஜும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனாவும் முதலிடத்தை பகிர்ந்து இருந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்ததன் மூலம் கேஷவ் மகராஜ் தனியாக முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். தீக்‌ஷனா 2-வது இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா இரு இடங்கள் அதிகரித்து முதல்முறையாக ‘நம்பர் 1’ அந்தஸ்தை எட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளில் அரைசதம் (92 மற்றும் 59 ரன்) விளாசிய அவர், ஒரு விக்கெட்டும் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (296 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கினார். முகமது நபி 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 9-வது இடம் வகிக்கிறார்.

1 More update

Next Story