ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் - கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் - ரோகித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் - ரோகித் ஜோடி 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி இதுவரை 12 முறை 150+ ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சச்சின் - கங்குலி இணையின் மாபெரும் சாதனையை ரோகித் - விராட் கூட்டணி சமன் செய்துள்ளது. இந்த சாதனையில் தில்ஷன் - சங்கக்கரா ஜோடி 7 முறையுடன் 2-வது இடத்தில் உள்ளது.






