

மும்பை,
2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் பரூக் இன்ஜினியர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவுடன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பரூக் இன்ஜினியர் கூறுகையில், "2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடும் பட்சத்தில், அவருடன் இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். இடது-வலது கை பேட்டிங் ஜோடி எப்போதும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பலனை கொடுக்கும்" என்றார்.
மேலும் விராட் கோலி 3-வது இடத்திலும், தற்போது தொடக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் 4-வது இடத்திலும் களமிறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இன்னும் வலுவாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
பரூக் இன்ஜினியரின் இந்த கருத்து ரசிகர்களில் கவனத்தை ஈர்த்துள்ளநிலையில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியை இப்போதே 50 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.