

கடந்த 22ந்தேதி டர்பனில் நடந்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது, இனவெறியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார்.தென்ஆப்பிரிக்க வீரர் அன்டில் பெலக்வாயோ பேட்டிங் செய்த போது, அவரை நோக்கி ஏய், கருப்பு இன வீரரே, இன்று உனது அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக என்ன பிரார்த்தனை செய்ய சொல்லி இருக்கிறாய் என்று கூறி கேலி செய்தார் சர்ப்ராஸ் அகமது. இந்தபேச்சு ஸ்டம்பு மீது இருந்த மைக்கில் பதிவானது.
இது சர்ச்சையாகிய நிலையில், பெலக்வாயோவை அவுட் செய்ய முடியாத விரக்தியில் அவ்வாறு பேசி விட்டதாகவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று மன்னிப்பு கோரினார் சர்ப்ராஸ் அகமது. இதனையடுத்து இவ்விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கையில் எடுத்தது. இனவெறி பாகுபாட்டை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்ப்ராஸ் அகமதுவுக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்தது.
சர்ப்ராஸ் அகமது வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுவிட்டார், ஐ.சி.சி. எடுத்த இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.