பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்னும் 8 ஆட்டங்கள் மீதமுள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கராச்சி,

6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன.

ஆனால் பாதுகாப்பு அச்சத்தால் இந்த ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. அத்துடன் பாகிஸ்தானில் பல இடங்களில் டிரோன் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனால் அந்த நாட்டில் பதற்றம் நிலவுகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில் நடந்த டிரோன் தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததுடன், சிலர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எல்லா அணி நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் நேற்று இரவு நடக்க இருந்த லீக் ஆட்டத்தை மற்றொரு நாளுக்கு தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ஆட்டம் எங்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் ஆட்டங்கள் என மொத்த 8 ஆட்டங்கள் மீதமுள்ளன. பாதுகாப்பு காரணமாக சில வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பும் யோசனையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com