பாகிஸ்தான் சூப்பர் லீக்; ஆட்டநாயகனுக்கு 'ஹேர் டிரையர்' பரிசளித்த அணி நிர்வாகம் - வீடியோ

Image Courtesy: @KarachiKingsARY / X (Twitter) / File Image
கராச்சி கிங்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் 101 ரன் எடுத்து அசத்தினார்.
கராச்சி,
இந்தியாவில் நடைபெரும் ஐ.பி.எல். தொடர் போல பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நடப்பு சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. முல்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 105 ரன் எடுத்தார். தொடர்ந்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கராச்சி கிங்ஸ் 19.2 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 236 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கராச்சி கிங்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் 101 ரன் எடுத்து அசத்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ஜேம்ஸ் வின்ஸ்-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிரடியாக ஆடி சதம் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வின்ஸ்-க்கு அணி நிர்வாகம் சார்பில் 'ஹேர் டிரையர்' பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த பரிசை ஜேம்ஸ் வின்ஸ் சிரித்து கொண்டே வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






