

ராவல்பிண்டி,
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் வெள்ளிக்கிழமை ராவல்பிண்டியில் தொடங்க உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாஹிப்சாதா பர்ஹான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சல்மான் அலி ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
அதேபோல், 2026 டி20 உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.
இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாஹிப்சாதா பர்ஹான் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.
அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதையடுத்து, இலங்கை தொடருக்கான டி20 அணியின் கேப்டன் பொறுப்பு பர்ஹானுக்கு வழங்கப்பட்டுள்ளது.