

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் டெயிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய 51 வயதான ஷேன் டெயிட்ஸ், தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். இவர் வாஹாப் ரியாஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷேன் டெயிட்ஸ் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது பயிற்சியின் கீழ் வெஸ்ட் இண்டீஸ் அணி 2024 மற்றும் 2026-ம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதுதவிர வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து பெண்கள் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். நியூசிலாந்தின் கிரிக்கெட் வெலிங்டன் அமைப்பில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை உயர் செயல்திறன் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
தனது நியமனம் குறித்து ஷேன் டெயிட்ஸ் கூறுகையில், பாகிஸ்தான் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்தார். 2028-ம் ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் நடத்த உள்ளதால், சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அணியை உருவாக்குவதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார். இதற்காக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.