

சைல்ஹெட்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி 104 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் இன்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் ஷான் மஸத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது. வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் சதமடித்து 128 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடர்ந்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்த போது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிக்கு பந்தை தடுக்கும் போது தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
இருப்பினும் மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு, மீண்டும் களத்திற்குத் திரும்பி அவர் பந்துவீசினார்.