கோப்பையை வென்று கொடுத்த படிதார்... விராட் கோலி வழங்கிய நெகிழ்ச்சி பரிசு

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது.
image courtesy:twitter/@IPL
image courtesy:twitter/@IPL
Published on

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் கணிசமாக ரன் குவிக்கும் கோலிக்கு முதல் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த 18 ஆண்டு கால ஏக்கம் நேற்று முன்தினம் இரவு தணிந்தது. இந்த வெற்றியை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு விராட் கோலி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

அவர் கேப்டனாக இருந்தும் வெல்ல முடியாத இந்த ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் சீசனிலேயே ரஜத் படிதார் வென்று கொடுத்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த விராட் கோலி, ரஜத் படிதாருக்கு பரிசளித்துள்ளார்.

இறுதிப்போட்டி முடிந்ததும் ஓய்வறைக்கு சென்ற விராட் கோலி, அங்கிருந்த ரஜத் படிதாரை பார்த்து "என்ன ஒரு திருப்பம். மாற்று வீரராக அணிக்குள் வந்து இன்று ஐ.பி.எல். கேப்டனாக மாறியுள்ளாய்" என்று கேலி செய்தார்.

பின்னர் தன்னுடைய "பேவரைட் பேட்" ஒன்றை ரஜத் படிதாரை நோக்கி தூக்கி எறிந்தார். அதனை பிடித்த ரஜத் படிதார் விராட் கோலி கொடுத்த அந்த நெகிழ்ச்சி பரிசை பெற்றுக் கொண்டு அந்த பேட்டை முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com