

சென்னை,
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் தொடர்களை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும், 2027-ம் ஆண்டின் மத்தியில் இங்கிலாந்துக்கு எதிராகவும் வங்காளதேச மகளிர் அணி விளையாட உள்ளது.
இந்த தொடர்கள் குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ஜோதி, "இது எங்கள் அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாட வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் விருப்பம். அங்கு விளையாடுவது எங்கள் கிரிக்கெட் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும்" என்று கூறினார்.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் இறுதிப்போட்டி வரை செல்வதே தங்களது இலக்கு என கூறினார். வங்காளதேச அணி தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொள்ள உள்ளது.