பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த பிரதமர் லெவன் அணி

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
image courtesy: twitter/@BCCI
image courtesy: twitter/@BCCI
Published on

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தொடங்க இருந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி நாளான இன்று பயிற்சி ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரதமர் லெவன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேட் ரென்ஷா - சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். இதில் ரென்ஷா 5 ரன்களிலும் அவரை தொடர்ந்து ஜெய்டன் குட்வின் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ஜோடி சேர்ந்த சாம் கான்ஸ்டாஸ் - ஜேக் கிளெடன் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னேடுத்து சென்றது. இதில் கிளெடன் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பிரதமர் லெவன் அணி மீண்டும் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆலிவர் டேவிஸ் மற்றும் சாம் ஹார்பர் இருவரும் டக் அவுட்டிலும், ஜேக் எட்வர்ட்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்டை ராணா வீழ்த்தினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கான்ஸ்டாஸ் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். இறுதி கட்டத்தில் அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேக்கப்ஸ் 61 ரன்களும், அபாரமாக விளையாடிய கான்ஸ்டாஸ் சதமடித்த சிறிது நேரத்தில் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 43.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த பிரதமர் லெவன் அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com