

புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராக முன்னாள் இந்திய வீரர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடிய தேர்வுக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், பிரக்யான் ஓஜா தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இடைக்கால தலைமை தேர்வாளராகப் பணியாற்றி வந்தார்.
தேர்வுக்குழுவில் ரமேஷ் பவார்
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரமேஷ் பவாரை தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்க, பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்தள்ளது. ரமேஷ் பவார் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். வீரராக ஓய்வுபெற்ற பிறகு, இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், மும்பை மற்றும் குஜராத் அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, ஆசியக் கோப்பையை வெல்லவும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறவும் வழிவகுத்தார்.