பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல்

பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தினார்.
பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல்
Published on

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் இளம் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி அசத்தினார்.

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான பால்க் லெஜண்ட்ஸ்-ரஷித் கான் தலைமையிலான காபுல் ஜவாணன் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பால்க் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெய்ல் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய காபுல் ஜவாணன் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் முதல் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து 4-வது ஓவரில் அப்துல்லா மஜாரி பந்து வீச்சில் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 3-வது பந்து மட்டும் வைடாக அமைந்தது. அந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள் வந்தது.

12 பந்துகளில் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் அரைசதத்தை எட்டினார். ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹஸ்ரத்துல்லா ஜஜாய் சாதனைகள் படைத்தாலும் அவரது அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. காபுல் ஜவாணன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஒட்டு மொத்த போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை 20 வயதான ஹஸ்ரத்துல்லா ஜஜாய் பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (வெஸ்ட்இண்டீஸ், முதல் தர போட்டி), ரவிசாஸ்திரி (இந்தியா, முதல் தர போட்டி), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா, சர்வதேச ஒருநாள் போட்டி), யுவராஜ் சிங் (இந்தியா, சர்வதேச 20 ஓவர் போட்டி), ராஸ் ஒயிட்லி (இங்கிலாந்து, கவுண்டி கிரிக்கெட்) ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர்.

20 ஓவர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்ற ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 12 பந்துகளில் அரைசதத்தை எட்டியதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), யுவராஜ்சிங் (இந்தியா) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

சாதனை படைத்த ஹஸ்ரத்துல்லா ஜஜாய் கருத்து தெரிவிக்கையில், எனக்கு முன்மாதிரியான வீரர் கெய்ல். அவரது முன்னிலையில் படைத்த இந்த சாதனைகளை என்னால் நம்பமுடியவில்லை. எனது வழக்கமான ஆட்டத்தை தான் ஆடினேன். மற்றபடி எந்த சாதனைகள் குறித்தும் நான் சிந்திக்கவில்லை. இந்த ஆட்டத்தின் மூலம் எனது பெயர் ஜாம்பவான் வீரர்கள் பட்டியலுடன் இணைந்து இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com