68 பந்துகளில் 181 ரன்கள்... கே.எல். ராகுலின் சாதனையை உடைத்த பிரியான்ஷ் ஆர்யா

பிரியான்ஷின் இந்த அதிரடி ஆட்டம் சையத் முஷ்டாக் அலி டிராபி வரலாற்றிலும் புதிய சாதனையாக அமைந்துள்ளது.
68 பந்துகளில் 181 ரன்கள்... கே.எல். ராகுலின் சாதனையை உடைத்த பிரியான்ஷ் ஆர்யா
Published on: 

இந்தூர்,

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக 68 பந்துகளில் 181 ரன்கள் விளாசி கே.எல். ராகுலின் சாதனையை முறியடித்துள்ளார்.

19 சிக்ஸர்கள்... 266 ஸ்ட்ரைக் ரேட்

தமிழ்நாடு அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா, 68 பந்துகளில் 181 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 19 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 266.17 ஆகும்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற கே.எல். ராகுலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வீரர்களில் அதிகபட்ச டி20 தனிநபர் ஸ்கோர் என்ற சாதனை கே.எல். ராகுல் வசம் இருந்தது. அவர் 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியபோது, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரியான்ஷ் முறியடித்துள்ளார்.

உலக அளவில் இரண்டாவது இடம்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிரியான்ஷ் ஆர்யா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளார். அவர் 2026 அக்டோபரில் நடைபெற்ற சிஎஸ்ஏ புரோ20 தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக நைட்ஸ் அணிக்கு எதிராக 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் எடுத்திருந்தார்.

உலக சாதனை சமன்

ஒரே டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் பிரியான்ஷ் சமன் செய்துள்ளார். 19 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் பின் ஆலனின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

2025-ம் ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய பின் ஆலன், வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 151 ரன்கள் எடுத்திருந்தார். அந்த இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் சாதனை

பிரியான்ஷின் இந்த அதிரடி ஆட்டம் சையத் முஷ்டாக் அலி டிராபி வரலாற்றிலும் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு இந்தத் தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனை ஐதராபாத் அணியின் திலக் வர்மா வசம் இருந்தது. அவர் 2024 நவம்பரில் மேகாலயா அணிக்கு எதிராக 151 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரியான்ஷ் முறியடித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்

அடுத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள பிரியான்ஷ் ஆர்யா, நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 362 ரன்கள் எடுத்துள்ள அவர், சராசரியாக 60.33 ரன்களையும், 204.51 ஸ்ட்ரைக் ரேட்டையும் பதிவு செய்துள்ளார். இதில் ஒரு சதம், மூன்று அரைசதங்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் டெல்லி அணி 275 ரன்கள் எடுத்த நிலையில், இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் டெல்லி அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X