விராட் கோலி நிறைய ரன்கள் அடிக்க புஜாரா முக்கிய காரணம் - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு


விராட் கோலி நிறைய ரன்கள் அடிக்க புஜாரா முக்கிய காரணம் - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு
x

image courtesy:PTI

தினத்தந்தி 26 Aug 2025 4:56 PM IST (Updated: 29 Aug 2025 12:03 PM IST)
t-max-icont-min-icon

விராட், ரோகித் ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக அஸ்வின் பாராட்டியுள்ளார்.

சென்னை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ‘சுவர்’ என்று அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். இடையில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார். அதுபோக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் புஜாரா 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடியதாலயே 4வது இடத்தில் விராட் கோலி நிறைய ரன்கள் குவித்ததாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டில் சேதேஷ்வர் புஜாரா எங்கே நிற்கிறார்? அவரது பங்களிப்புகள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு குறைவானவை இல்லை என்று நான் கூறினேன். பலர் அவர்களின் பங்களிப்புகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் புஜராவுக்கு எந்த கவனமும் கிடைப்பதில்லை. அனைத்து கிரிக்கெட்டர்களுக்கும் கவனம் கிடைப்பதில்லை. அதற்காக அவர்களுடைய பங்களிப்பு குறைவானது என்று அர்த்தம் கிடையாது.

நீங்கள் நம்பினாலும் இல்லையென்றாலும் புஜாரா 3வது இடத்தில் கொடுத்த பங்களிப்புதான் விராட் கோலி நிறைய ரன்கள் அடிப்பதற்கு மிகப்பெரிய கருவியாக இருந்தது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு புஜாராவின் பங்களிப்பு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் கேம் ஆப் த்ரோன்ஸ் பார்த்திருந்தால், அதில் ஒரு வைட் வாக்கர் கதாபாத்திரம் உள்ளது. நான் புஜாராவை ஒரு வைட் வாக்கர் என்று அழைத்தேன். அவர் மெதுவாக ரன் அடித்தாலும் ஒருபோதும் களத்தை விட்டு வெளியேற மாட்டார்” என்று கூறினார்.

1 More update

Next Story