Image Courtesy: AFP
Image Courtesy: AFP

புனே டெஸ்ட்; இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Published on

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னெரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்திருந்தது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் டாம் பிளண்டெல் 41 ரன்னிலும், சாண்ட்னெர் 4 ரன்னிலும், அஜாஸ் படேல் 1 ரன்னிலும், சவுதி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 255 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com