

கொல்கத்தா,
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு, பின்னடைவாக அணியின் முக்கிய வீரர்கள் இருவர் காயம் காரணமாக நடப்புத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக் மற்றும் இந்திய இளம் வீரர் ராஜ் அங்கத் பாவா ஆகிய இருவருமே காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்பதை மும்பை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும், அவர்கள் விரைவில் குணமடைந்து களம் திரும்ப மும்பை இந்தியன்ஸ் மருத்துவக் குழு தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும், டாப் 4 இடத்திற்குள் நுழையப் போராடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் பிளே ஆப் கனவை கெடுக்கும் "வில்லன்"-ஆக மும்பை மாற வாய்ப்புள்ளது. இந்த இரு அணிகளுக்கும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட அது அவர்களின் பிளே ஆப் வாய்ப்பை மொத்தமாக காலி செய்துவிடும்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அடுத்த லீக் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்று சேர்ந்துள்ளது. மே 20 (நாளை) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மும்பை மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.